காதல் தொல்லைக்கு தடையாக இருந்தவர் சரமாரியாக வெட்டி, முகம் சிதைத்து கொடூர கொலை.. தென்காசி அருகே பயங்கரம்.!

காதல் தொல்லைக்கு தடையாக இருந்தவர் சரமாரியாக வெட்டி, முகம் சிதைத்து கொடூர கொலை.. தென்காசி அருகே பயங்கரம்.!


Tenkasi Alangulam Man Murder By 4 Man Gang He Works Nutrition Center

பெண்ணை காதலிக்க வற்புறுத்திய இளைஞனின் எண்ணம் நிறைவேறாத காரணத்தால், அதற்கு தடையாக மற்றொருவர் இருக்கிறார் என அப்பாவியை கொலை செய்த பயங்கரம் தென்காசி அருகே நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், ஊத்துமலை கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 58). இவரின் மனைவி பன்னீர். தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், முருகேசன் டி.டி.டி.ஏ பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுகிறார். பன்னீர் ஊத்துமலை அருகேயுள்ள கறுப்பினங்குளம் கிராம பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் முருகேசன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஊத்துமலை பழைய காவல் நிலையம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முருகேசனை வெட்டிச்சாய்த்து, முகத்தை கொடூரமாக சிதைத்து தப்பி சென்றது. இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகேசனை மீட்ட உறவினார்கள் மற்றும் நண்பர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகேசனின் உயிர் பிரிந்ததை தொடர்ந்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக ஊத்துமலை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், முருகேசனின் உறவினருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறார். இப்பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்ற 30 வயது இளைஞன் பெண்ணை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தவே, பெண் மறுப்பு தெரிவித்ததால் முருகேசனின் உறவினரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். இதற்கு அவர்களும் மறுப்பு தெரிவிக்கவே, அவ்வப்போது பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் தரப்பில் செல்வமுருகனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவே, காவல் நிலையம் வரை புகார் செல்ல முருகேசன் தான் காரணம் என செல்வமுருகன் எண்ணியுள்ளார். இதனால் செல்வமுருகன் தனது கூட்டாளிகள் 3 பேரோடு சேர்ந்து கொலையை அரங்கேற்றி இருக்கிறார். தற்போது தலைமறைவாகியுள்ள கொலை கும்பலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.