ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்!.. பட்டதாரி வாலிபரை காவு கொண்ட ரம்மியாட்டம்..!

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்!.. பட்டதாரி வாலிபரை காவு கொண்ட ரம்மியாட்டம்..!


Suicides caused by online gambling

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கருமாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண்குமார் ( 24). இவர் பி.காம் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். இவரது தந்தை சங்கர் இறந்துவிட்டதால் தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் அருண்குமாரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர், மாயமான அருண்குமாரை தேடி வந்தனர்.

இதற்கிடையே கருமாங்கிணறு பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் நேற்று மாலை அருண்குமாரின் உடல் மிதந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கள்ளிமந்தையம் காவல் நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மிதந்த அருண்குமாரின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆன்லைன் சூதாட்டம் மீது ஏற்பட்ட நாட்டத்தால் அருண்குமார் சுமார் 50 ஆயிரம் வரை பணத்தை இழந்ததாகவும், இதனை அறிந்த அவரது தாயாரும், நண்பர்களும் அவரை கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருண்குமார் சம்பவத்தன்று ஊர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.