தமிழகம்

பண்டிகை கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள்.! இன்றுமுதல் டிக்கெட் முன்பதிவு.!

Summary:

சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் ரயில், விமானம், பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டது.

இதனையடுத்து ஊரடங்கில் இருந்து  தளர்வுகள்அளிக்கப்பட்டு போக்குவரத்து சிக்கல்கள் தவிர்க்கப்பட்டது. இந்தநிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வரவிருப்பதால், அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை, திருவிழா சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே அதிவிரைவு பண்டிகை கால சிறப்பு ரயில் வருகிற 23, 24, 29-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ரயில் நாகர்கோவில்- எழும்பூர் இடையே வருகிற 26, 27-ஆம் தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 15, 16-ந்தேதிகளில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement