மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்...!! அமைச்சர் செந்தில் பாலாஜி..!!Senthil Balaji arrange special camp across Tamil Nadu to link Aadhaar number with electricity connection

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. 

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமை உள்பட பண்டிகை தினத்தை தவிர்த்து அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இரண்டு கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் உள்ளன. 

இந்நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை மின் இணைப்புகளுடன் இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போனுக்கு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். அவரவர் பகுதியில் இருக்கும் இண்டர் நெட் சென்டர்களுக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைய தளம் மூலம் மிக எளிதாக இணைக்கலாம். ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. பொதுமக்களுக்கு மிக குறுகிய காலத்தில் இதனை செய்து முடிப்பதற்கு கால அவகாசம் போதாததால், தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இன்று முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுவரை ஏற்கனவே இருக்கும் நடைமுறையே பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.