பாறைக்குழியில் சைக்கிளோடு விழுந்த சிறுவன்!.. 2 வது நாளாக தேடுதல் பணி தீவிரம்..!Search operation intensified for 2nd day after boy fell with bicycle in rock pit

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள குப்புசாமி நாயுடுபுரம் அரிவரதன் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் கெளதம் ( 13 ). இவர் அதே பகுதியில் இயங்கிவரும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று விளையாட்டு மைதானத்திற்கு சென்று நண்பர்களுடன் விளையாடி விட்டு வருவதாக பெற்றோரிடம் சொல்லி விட்டு மிதிவண்டி எடுத்துக்கொண்டு சென்ற கெளதம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மைதானத்திற்கு அவரை தேடிச் சென்றனர்.

அப்போது சுக்கம்பாளையம் பாறைக் குழி அருகே மிதிவண்டியில் சென்ற சிறுவன் ஒருவன் தவறி பாறைக்குழியில் விழுந்ததாக அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தியாகராஜன், சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைபு வீரர்களும் , பாறை குழியில் இறங்கி சிறுவனை தேடினர். சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பிறகு மிதிவண்டி மட்டும் கிடைத்தது. சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்ததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும்  சிறுவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று மீண்டும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.