சிறுமி, கல்லூரி மாணவியுடன் 2 வருட தலைமறைவு வாழ்க்கை.. காவல்துறை கயவனை கைது செய்தது எப்படி?..!

சிறுமி, கல்லூரி மாணவியுடன் 2 வருட தலைமறைவு வாழ்க்கை.. காவல்துறை கயவனை கைது செய்தது எப்படி?..!


Salem Culprit Teacher Kidnap Minor Girl and College Girl Police Arrested after 2 Years

டியூசன் பயின்ற 16 வயது சிறுமி மற்றும் 19 வயது கல்லூரி மாணவியுடன் 2 வருடமாக தலைமறைவாக இருந்த கயவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கல்லூரி மாணவி தோழிக்கு தொடர்பு கொண்டு காப்பாற்ற தகவல் தெரிவிக்க, காவல் துறையினர் அதிரடியாக களமிறங்கி கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் வசித்து வந்தவன் மணிமாறன். இவன் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், ஒழுங்கீன புகாரில் கடந்த 2019 ஆம் வருடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டான். இதனால் ஆத்தூரில் தனியார் நிறுவனம் வைத்து நடத்திய நிலையில், மக்களிடம் மோசடி செய்து பணத்தை பெற்று தலைமறைவானான். 

இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூரில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளான். அங்கு செயல்பட்டு வந்த நடன பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்ற தொடங்கிய நிலையில், தங்கியிருந்த வாடகை வீட்டருகே வசித்து வந்த 16 வயது சிறுமிக்கு கணித டியூசன் வகுப்பு எடுத்து வந்துள்ளான். 

பின்னர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி செல்லவே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவனை தேடி வந்துள்ளனர். இவனுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகிய நிலையில், 16 வயது சிறுமியை பொள்ளாச்சி மற்றும் கொடைக்கானல் என ஊர் ஊராக அழைத்து சென்றுள்ளான். 

Salem

இறுதியாக, 16 வயது சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்தரத்திற்கு சென்றவன், தங்களை புதுமணத் தம்பதி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளான். அப்போது, வீட்டின் உரிமையாளருக்கு 19 வயது மகள் இருந்த நிலையில், கல்லூரி மாணவியான அவருடனும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறான்.

கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறியவன், அவரையும் - 16 வயது சிறுமியையும் அழைத்துச்சென்று தலைமறைவாகியுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக 19 வயது கல்லூரி மாணவியின் தந்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், கயவன் சிறுமி மற்றும் கல்லூரி மாணவியுடன் வெளிமாநிலத்திற்கு சென்றது உறுதியானது.

கடந்த 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் கோயம்புத்தூர் காவல் துறையினரும், கன்னியாகுமரி காவல் துறையினரும் மணிமாறனை தேடி வந்த நிலையில், கல்லூரி மாணவி தனது தோழிக்கு சமீபத்தில் தொடர்பு கொண்டு மணிமாறன் தன்னை அடைத்து வைத்திருப்பதாகவும், காப்பாற்றுமாறும் கதறியுள்ளார். இதனையடுத்து, அவரின் தோழி பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த தகவல் காவல் துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவே, தனிப்படை காவல் துறையினர் ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதிக்கு சென்று மணிமாறனை கைது செய்தனர். அவனின் கட்டுப்பாட்டில் இருந்த சிறுமி மற்றும் இளம்பெண் மீட்கப்பட்டனர்.