மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய வடமாநில ரயில்வே ஊழியர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய வடமாநில ரயில்வே ஊழியர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!



robbery in Thiruvanmiyur railway station

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பயணிகள் கவுன்ட்டருக்குள் எட்டிப்பார்த்த போது ஊழியர் கட்டிப்போட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து கட்டிப்போட்டிருந்த ஊழியரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், தனது பெயர் டீக்காராம் மீனா (வயது 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், நான் இரவு பணியில் இருந்த போது நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென கவுன்டருக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரிவித்தார். பின்னர் கை, காலை கட்டிப்போட்டு கவுன்டரில் இருந்த 1.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக வாக்குமூலம் அளித்தார். 

இதனையடுத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண் ஒருவர் அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்திற்கு செல்வது போல் பதிவாகி இருந்தது. இந்த பெண் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய போது டீகாராம் மீனாவின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார் டீக்காராமிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி தனது மனைவியுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, ரெயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரெயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர்.