கடவுள் மனசு இவுங்களுக்கு...! ஒரே மேடையில் 14 ஜோடிகளுக்கு திருமணம்! ரூ.5 லட்சம் சீர்வரிசை... குடும்பங்களுக்குக் கிடைச்ச புதுவிதமான வாழ்க்கை..! நெகிழவைக்கும் பாரம்பரியம்..!!!
திருச்செந்தூர் அருகே தாமிரபரணி நதி கடலில் கலக்கும் புன்னக்காயல் கிராமத்தில், ஏழ்மை நிலையில் இருந்த 14 ஜோடிகளுக்கு ஊர் மக்கள் ஒன்றிணைந்து இலவசமாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர். புன்னக்காயல் ஊர் நலக் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், இரு வீட்டார் சம்மதத்துடன் 14 ஜோடிகளும் ஒரே மேடையில் மணமுடித்தனர். புதிய வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதிகளுக்கு தங்கத் தாலி உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
ஒரே மேடையில் 14 ஜோடிகளுக்கு திருமணம்
புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை முன்னிலையில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 14 ஜோடிகள் இந்த ஆண்டுக்கான சமூகத் திருமணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
தங்கத் தாலி முதல் 36 வகை சீர்வரிசை வரை
திருமணம் முடிந்த ஒவ்வொரு மணமகளுக்கும் தலா ஒரு சவரன் தங்கத் தாலி வழங்கப்பட்டது. அதோடு, கட்டில், பீரோ, தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி உள்ளிட்ட 36 வகையான வீட்டு உபயோகப் பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டன. ஒரு ஜோடிக்கு வழங்கப்பட்ட சீர்வரிசைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளாக தொடரும் சமூகத் திருமண பாரம்பரியம்
புன்னக்காயல் கிராமத்தில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில், இதுபோன்ற சமூகத் திருமண முறை சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருவதாக ஊர் நலக் கமிட்டியினர் தெரிவித்தனர். திருமணச் செலவுகளை தனிப்பட்ட குடும்பங்கள் ஏற்க வேண்டிய சுமையை குறைக்கும் வகையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஏற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய சூழலில் ஒரு திருமணத்தை நடத்துவதே பல குடும்பங்களுக்கு பொருளாதார சவாலாக உள்ள நிலையில், 14 குடும்பங்களின் திருமணச் செலவுகளையும் ஊர் மக்கள் கூட்டாக ஏற்றுக்கொண்டது கவனம் பெற்றுள்ளது. சீர்வரிசைப் பொருட்களை வழங்குவதோடு நிற்காமல், புதிய வாழ்க்கையைத் தொடங்கும் தம்பதிகளுக்கு சமூகத்தின் ஆதரவும் இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வாழ்த்திய இந்தத் திருமணம், புன்னக்காயல் கிராமத்தின் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
இதையும் படிங்க: இன்பச் செய்தி! குடும்ப அட்டைதாரர்கள் யாருக்கும் ரேஷனில் பொருள்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது..! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!!