பெண் காவலரை கத்திமுனையில் மிரட்டி தாலி கட்ட முயன்ற ஆண் காவலர்! சென்னையில் பரபரப்பு

பெண் காவலரை கத்திமுனையில் மிரட்டி தாலி கட்ட முயன்ற ஆண் காவலர்! சென்னையில் பரபரப்பு



policeman tried to knot lady police SI

சென்னையில் ஒருதலை காதலால் திருமணமான பெண் எஸ்ஐக்கு கத்தி முனையில் மிரட்டல் விடுத்து கட்டாய தாலி கட்ட முயன்றதாக ஊர்காவல் படை வீரரை சென்னை போலீஸார் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவ மணிமேகலை (24) என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்வின் மூலம் நேரடியாக போலீஸ் எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டவர். திருமணமான இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பயிற்சி எஸ்ஐயாக முதலில் பணிபுரிந்துள்ளார். அப்போது மணிமேகலைக்கும் அதே காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் பணி செய்த காட்பாடியைச் சேர்ந்த பாலசந்திரன் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் பெண் எஸ்ஐ மணிமேகலையை, பாலச்சந்திரன் காதலித்ததாகவும் அவரை திருமணம்செய்துகொள்ள பலமுறை கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, மணிமேகலை சென்னை நுங்கம்பாக்கத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பாலச்சந்திரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி போனில் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

policemen

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலச்சந்திரனை சென்னை எழும்பூருக்கு வரவழைத்துள்ளார் பெண் எஸ்ஐ. அதன்பேரில் அங்கு வந்த பாலச்சந்திரனிடம் தன்னை இனிமேல் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெண் எஸ்ஐ எச்சரித்துள்ளார்.

அப்போது பாலச்சந்திரன் திடீரென தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பெண் எஸ்ஐக்கு கட்டாய தாலி கட்ட முயன்றுள்ளார். அங்கிருந்து ஒருவழியாக தப்பித்த பெண் எஸ்ஐ மணிமேகலை, இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்துள்ளனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இரண்டு காவலர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.