ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை ரயிலில் தவறவிட்ட பயணி.! ஒரே ஒரு போன்கால்.! ஒட்டுமொத்த நகைகள் மீட்பு.!
ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை ரயிலில் தவறவிட்ட பயணி.! ஒரே ஒரு போன்கால்.! ஒட்டுமொத்த நகைகள் மீட்பு.!

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரயிலில் சென்ற பயணி தவறவிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை ரயில்வே போலீஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருடைய மகள் சரண்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார் ஆனந்தகுமார்.
ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்த பின்னர் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு உறவினர்களுடன் இறங்கினார். பின்னர் ரயில் புறப்பட்டது. இதனையடுத்து ஆனந்தகுமார் ராணிப்பேட்டை சென்றார். வீட்டிற்கு சென்ற பிறகு தான் நகை, பணம் வைத்திருந்த சூட்கேஸை ரயிலிலேயே தவற விட்டது தெரியவந்தது. அதில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வைரக் கம்மல், ரூ.17,500 மதிப்புள்ள மோதிரம் உட்பட மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது.
இதனையடுத்து பதறிப்போன ஆனந்தகுமார் உடனடியாக இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள், சென்னை பெரம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெரம்பூர் ரயில் நிலையம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆனந்தகுமார் பயணம் செய்த பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பெட்டியை பத்திரமாக மீட்டு சென்னை வந்த ஆனந்தகுமாரிடம் ஒப்படைத்தனர்.