அரசியல் தமிழகம்

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்.! எம்.பி.கனிமொழி கண்டனம்.!

Summary:

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்தநிலையில், 800 திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனங்கள் உலவுவதாகவும், அதை உலவவிட்டவர்களை உடனடியாக கைது செய்யுங்கள் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தர்மபுரி தி.மு.க. எம்.பி.செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.  

இந்தநிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


Advertisement