தமிழகம்

மகளின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்! 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மையால் கதறிதுடித்த பரிதாபம்!

Summary:

Mother saved 500, 1000 notes are banned by government

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி  பட்டியமேடு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை 58 வயது நிறைந்த இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 17 வயதில் விமலா என்ற மகள் உள்ளார். விமலா மற்றும் உஷா இருவரும் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளியாவர். 
இந்த நிலையில் தாய் உஷா, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் கூலியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்துள்ளார். 

 இவ்வாறு 500 மற்றும் 1000 நோட்டுகள் என அவர் மொத்தமாக ரூ. 35,500 சேர்த்து வைத்துள்ளார். அந்த பணத்தையும், அதனுடன் அரை பவுன் மதிப்புள்ள தோடு ஒன்றையும் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக சுருட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உஷா தனது கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டி புதைத்து வைத்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் ராஜதுரை தனது  குடிசையை பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் அனுமதி பெற்று, வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

அப்பொழுது வீடு கட்டும் பணிக்காக தொழிலாளர்கள் சிலர் வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது, அவர்கள் அந்த பிளாஸ்டிக் பையை கண்டெடுத்துள்ளனர். அதனை பிரித்துப் பார்த்த அவர்கள் இது யாருடையது என கேட்டுள்ளனர்.
இந்நிலையில் உஷா தனது மகளின் திருமணத்துக்காக தான் சேர்த்து வைத்த பணம் என சைகை  மூலம் அவர்களிடம் கூறியுள்ளார்.  

அதற்கு தொழிலாளர்கள் இந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 4ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் அறிவித்து விட்டார் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உஷா மற்றும் அவரது மகள் இருவரும் கதறி அழுதுள்ளனர். மேலும் எனது மகளின் திருமணத்திற்காக எனது கணவருக்கு தெரியாமல் நான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம். காதுகேளாத எனக்கு இதுகுறித்து யாரும் கூறவில்லை.? தமிழக அரசுதான் இந்த பணத்தை மாற்றி தர உதவ வேண்டும் என கண்ணீர் மல்க சைகை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement