தொடர்ந்து டிவி பார்த்ததற்காக கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து பெற்ற மகளின் உயிரை பறித்த அரசு பள்ளி ஆசிரியை!
நாமக்கல்லை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த தனது மகளை அடித்து தண்டனை கொடுத்ததில் சிறுமியின் உயிர் பரிதாபமாக பறிபோனது.
நித்ய கமலா என்ற அரசு பள்ளி ஆசிரியை நாமக்கல் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு லத்திகாஸ்ரீ என்ற 5 வயது மகள் இருந்துள்ளார்.
பள்ளிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டிலே இருந்து வருவது வழக்கமான ஒன்று தான். தற்போது தமிழகத்தில் கொழுத்தும் வெயிலில் நிச்சயம் குழந்தைகளால் எங்கும் வெளியில் செல்ல முடியாது.
இந்த சூழ்நிலையில் பெரும்பாலான குழந்தைகளின் ஒரே பொழுதுபோக்கு டிவி பார்ப்பது மட்டுமே. அப்படி தான் நாமக்கல்லை சேர்ந்த சிறுமி லத்திகாஸ்ரீ தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து டிவி பார்த்துள்ளார்.
லத்திகாஸ்ரீ தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பதால் ஆத்திரம் அடைந்த அவரது தாயார் நித்ய கமலா சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் கொளுத்தும் வெயிலில் வீட்டின் வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் சோர்ந்து போன சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகவே அவரை சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் உறவினர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சிறுமியின் தாய் நித்ய கமலாவை கைது செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.