
13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்.. பயிற்சி அளிப்பதாக பேரதிர்ச்சி செயல்..!
தடகள பயிற்சி அளிப்பதாக கூறி சிறுவர்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையில் உள்ள நெசப்பாக்கத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஒரு சிறுவன், தன்னுடைய நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு விளையாட செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த கோபிகண்ணன் என்பவரும் விளையாட்டு மைதானத்திற்கு வந்துள்ளார். இவருக்கு வயது 32.
இந்நிலையில், இவர் அந்த சிறுவன் மற்றும் அவனின் நண்பர்களிடம், தான் தடகள பயிற்சி அளிப்பதாக கூறி அறிமுகமாகியிருக்கிறார். அத்துடன் கோபிகண்ணன் பயிற்சி அளிப்பதாக கூறி சிறுவன் மற்றும் அவனின் நண்பர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் தன்னிடம் ஒருவர் தடகளப் பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுக்கிறார் என்ற விவரத்தை கூறியுள்ளான். இதனைக் கேட்ட சிறுவனின் தந்தை கோபிகண்ணன் மீது எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபிகண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைதான கோபிகண்ணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் எனவும், சென்னையில் இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்வதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement