எல்லா ஊர்லயும் மக்கள் தான் கோவிலுக்கு போய் ஆசிர்வாதம் பெறுவார்கள்..! ஆனால் இங்க மட்டும் கடவுளே மக்களை நோக்கி செல்வார்..!

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சித்திரை திருவிழா பார்க்கப்படுகிறது. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.
மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். விழா தொடங்கியதில் இருந்தே மதுரை முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா வழக்கம்போல் நடத்தப்படவில்லை. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
இந்தநிலையில் இந்த வருட சித்திரை திருவிழாவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் மதுரை மக்கள். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 14-ந்தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து ஏப்ரல் 15-ந்தேதி தேரோட்டமும் அன்றைய தினம் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் ஏப்ரல் 16-ந்தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த சித்திரை திருவிழாவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த திருவிழாவை பற்றி மதுரை மக்கள் கொடுக்கும் சுவாரசிய தகவல்களை பார்ப்போம்.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை பார்க்க அவரது சகோதரர் அழகர்மலை கோவில்ல இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி வருவார். அவர் வரும்பொழுது வழி நெடுக அவர வரவேற்று திருவிழா நடக்கிறது. மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை முழுவதும் ஒரு வாரம் திருவிழா கோலமா இருக்கும்..
ஆனால் அண்ணன் வருவதற்கு முன்பே மீனாட்சி கல்யாணம் முடிந்துவிடும். இதனால் இனிமேல் எனக்கு மக்கள் தான் முக்கியம் என்று அழகர் மதுரை முழுக்க ஒரு வாரம் ஊர்வலமாக வந்து மக்களுக்கு ஆசிர்வாதம் செய்கிறார். அனைத்து ஊர்களிலும் மக்கள் தான் கோவிலுக்கு சென்று கடவுளிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். ஆனால் மதுரை மக்களை ஆசிர்வதிக்க கடவுளே மக்களை நோக்கி ஊர்வலமாக ஒரு வாரம் சென்று ஆசி வழங்குவார். எனவே மீனாட்சி திருவிழா ஒருவாரமும், அழகர் திருவிழா ஒருவாரமும் என ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா இரண்டு வாரங்கள் நடைபெறும்.