'நீ போன இடத்துக்கு நானும் வாரேன்' கணவன் இறந்த துக்கத்தில் மனைவி விபரீதம்.. கண்ணீரில் உறவினர்கள்.!
அன்பான கணவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற வருத்தத்தில், மனைவியும் விபரீத முடிவெடுத்தார்.
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம், கலியடி பகுதியில் வசித்து வருபவர் சுகுமாரன் (வயது 38). இவரது மனைவி ரேஷ்மா (வயது 32). தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் குழந்தையும் இருக்கிறது. நர்சிங் பயின்றுள்ள சுகுமாரன், இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேமில் பணியாற்றி வந்துள்ளார்.
கணவரின் இழப்பால் மனநலம் பாதிப்பு:
அங்கு 80 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கு கேர்-டேக்கராக இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சுகுமாரன் தான் வேலை பார்த்து வந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியும் மர்மமான வகையில் உயிரிழந்து இருக்கிறார். கடந்த வாரம் புதன்கிழமையன்று சுகுமாரனின் உடல் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கணவரை இழந்த வருத்தத்தில் ரேஷ்மா மீளாத்துயரில் இருந்துள்ளார். இதனால் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு மனநல சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

தற்கொலை:
இந்நிலையில், கணவரின் இழப்பால் மனரீதியாக உடைந்துபோன ரேஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வெளிநாட்டில் மர்ம மரணம் அடைய, மனைவி கணவரை பிரிந்த துயரத்தில் உயிரை மாய்த்துக்கொண்டார்.