கருணாநிதியின் சிலை அகற்றம்; நள்ளிரவில் போலீசார் அதிரடி நடவடிக்கை

கருணாநிதியின் சிலை அகற்றம்; நள்ளிரவில் போலீசார் அதிரடி நடவடிக்கை


karunanithi statue removed at vellore

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 29ம் தேதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஒரு சிலையை நிறுவியுள்ளார். இவர் ஒரு தீவிர தி.மு.க வெறியர் மற்றும் கருணாநிதிக்கு கோவில் காட்டும் அளவிற்கு அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

karunanithi statue removed

கருணாநிதி இறந்த பிறகு முதன்முதலாகக் குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுசாலை பேருந்து நிறுத்தத்தில் உள்ள தி.மு.க கொடி கம்பத்தின் கீழ் கருணாநிதி உருவ சிலையை கிருஷ்ணமூர்த்தி நிறுவியுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது எனக் கூறி சிலையை அகற்றியுள்ளனர்.

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே குடியாத்தத்தை அடுத்த பரதராமி செல்லும் சாலையில் கருணாநிதிக்குக் கோயில் கட்டி வந்துள்ளார். பின்னர், அது வருவாய்த்துறை மற்றும் போலீஸாரால் தடுக்கப்பட்டு கோயில் இடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோயிலில் வைக்க அப்போது தயார் செய்யப்பட்ட கருணாநிதி சிலையைப் பாதுகாத்து வந்த கிருஷ்ணமூர்த்தி, தற்போது கருணாநிதி மறைந்ததையடுத்து அவரின் நினைவாக இரவோடு இரவாக சிலையை நிறுவியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கருணாநிதி சிலை அகற்றப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.