தமிழகம்

நகைக்காக 4 வயது சிறுவன் அடித்து கொலை., உடல் பீரோவில் மறைப்பு..! பதறவைக்கும் சம்பவத்தின், பதைபதைப்பு பின்னணி.!

Summary:

நகைக்காக 4 வயது சிறுவன் அடித்து கொலை., உடல் பீரோவில் மறைப்பு..! பதறவைக்கும் சம்பவத்தின், பதைபதைப்பு பின்னணி.!

ஒன்றரை சவரன் நகைக்காக சிறுவனை அடித்து கொலை செய்து, உடலை பீரோவில் வைத்த பக்கத்து வீட்டு பெண்ணின் பரபரப்பு செயல் தமிழக மக்களை அதிர வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியபட்டினம், பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவர் சவுதியில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சகாய சில்ஜா (வயது 28). இவர்களுக்கு 4 வயதுடைய ஜோகன் ரிஷி என்ற மகனும், 2 மாதமாகும் பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று முன்தினத்தில் சிறுவன் ரிஷி வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், மதியம் 1.15 மணியளவில் சிறுவனை சாப்பிட தாயார் அழைத்துள்ளார். அப்போது, சிறுவன் காணாத நிலையில், மகனை அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதனால் சகாய சில்ஜாவுக்கு பதற்றம் தொற்றிக்கொள்ள, உடனடியாக மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுவனை தேட தொடங்கிய நிலையில், சிறுவன் 1 பவுன் தங்க சங்கிலி, அரைபவுன் கைச்சங்கிலி மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு போன்றவற்றை அணிந்திருந்தபோது மாயமாகியுள்ளார். இதனால் மர்ம நபர்கள் நகைக்காக கடத்தி சென்றார்களா? என விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் ஆகியும் சிறுவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சகாய சில்ஜாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சரோபின் என்பவரின் மனைவி பாத்திமா (வயது 30) சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் வருவதற்குள் கிராம இளைஞர்கள் பெண்ணின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சிறுவனை தேடிய நிலையில், பூட்டப்பட்டு இருந்த பீரோவை உடைத்து பார்த்தனர். அப்போது, சிறுவன் பிணமாக பீரோவுக்குள் இருந்துள்ளார். இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோன இளைஞர்கள், சிறுவனின் கழுத்து மற்றும் தலை பகுதிகளில் இருந்த காயத்தை கண்டு வெகுண்டெழுத்துள்ளனர்.

மகனின் சடலம் இருக்கும் தகவலை அறிந்து வந்த தாய் சகாய சில்ஜா, கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜோகன் ரிஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபினை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில், சிறுவன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகைக்கு கொலை நடந்தது உறுதியானது. மேலும், நகையை பாத்திமா பறித்தும் சிறுவன் அழுது இருக்கிறான். இதனால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று, வாயில் துணிவைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க சிறுவனின் உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்துள்ளார். 

சிறுவனின் பிரேதத்தை கடலில் வீசவும் திட்டமிட்டு இருந்த நிலையில், 2 நாட்களாக காவல் துறையினர் மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் அனைவரும் சிறுவனின் வீடு மற்றும் அருகே உள்ள பகுதிகளில் சுற்றிக்கொண்டு இருந்ததால், சிறுவனின் உடலை கடலுக்கு எடுத்து செல்ல இயலவில்லை. இதன்பின்னர், இவரின் நடவடிக்கையை பார்த்து இளைஞர்கள் சந்தேகமாகி சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

சிறுவனின் சடலம் பாத்திமாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டபோது உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள், கொலை சம்பவம் உறுதி செய்யப்பட்டதும் வெகுண்டெழுந்து பாத்திமாவின் வீட்டை அடித்து நொறுக்கினர்.


Advertisement