நிர்வாண போட்டோ, வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டினர்: கல்யாண ராணி சந்தியா பகீர் குற்றச்சாட்டு..!Kalyana Rani Sandhya was threatened with nude photos and videos

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெங்கரை அருகேயுள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35). இவருக்கும் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் திருமண புரோக்கர் பாலமுருகன் என்பவரின் மூலம் திருமணம் நடைபெற்றது. அடுத்த  2 நாட்களில் புதுப்பெண் சந்தியா வீட்டில் இருந்த நகை, துணிமணிகளுடன் மாயமானார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சந்தியாவுக்கும், வெங்கரை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மற்றொரு திருமண புரோக்கரான தனலட்சுமி என்பவரின் மூலம் திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த தனபால், திருமணத்திற்காக திருச்செங்கோடு வந்த சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, ஐயப்பன், ஜெயவேல் மற்றும் கெளதம் ஆகிய 5 பேரையும் தனது உறவினர்கள் உதவியுடன் பிடித்து பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்துறையினரின் விசாரணையில், சந்தியா தனபால் உள்பட 6 பேரை திருமண மோசடி செய்ததும்,  7 வதாக இன்னொருவரை திருமணம் செய்து மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளது தெரியவந்தது.

காவல்துறையினரிடம் அவர் மேலும் கூறியதாவது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கரான பாலமுருகன் தன்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார். 6 க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி புரோக்கர் பாலமுருகன் காரில் அழைத்து சென்றுவிடுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது கூட்டாளிகளான ரோஷினி மற்றும் மாரிமுத்து ஆகியோர் அவரை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டதுடன் மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக  மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அவர்களுக்கு பயந்தே இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்ததாகவும், அவரை தவிர்த்து மேலும் 4 பெண்கள் மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளதாகவும் சந்தியா தெரிவித்துள்ளார்.