தமிழகம்

காதல் திருமணம்.. மஞ்சள் ஈரம் கூட காயாமல், பைபாஸில் ஜெட்வேக பயணம்.. காதலன் சாவு., காதலி உயிர் ஊசல்..! 

Summary:

காதல் திருமணம்.. மஞ்சள் ஈரம் கூட காயாமல், பைபாஸில் ஜெட்வேக பயணம்.. காதலன் சாவு., காதலி உயிர் ஊசல்..! 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் டி.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரின் மகன் நவீன் குமார் (வயது 23). இவர் பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்த முடித்த நிலையில், காவல்துறையில் சேரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் தனியார் கோச்சிங் சென்டரில் எழுத்துத் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். நவீன் கபாடி வீரரும் ஆவார். 

இந்த நிலையில், நேற்று பெரம்பலூர் பகுதியில் நடைபெறும் கபாடி போட்டிக்கு சென்று விட்டு வருவதாக தாயிடம் கூறிச் சென்றவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த தேவன் என்பவரின் மகள் சந்தியா (வயது 19) என்பவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகின்றது. இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது, அங்குள்ள வாலிகண்டபுரம் பகுதியில் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகியதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

சந்தியா சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சுயநினைவின்றி கிடந்துள்ளார். மேலும், அவரின் கழுத்தில் புதியதாக கட்டப்பட்ட மஞ்சள் தாழி இருந்துள்ளது. விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் உதவியுடன் சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக மங்கலமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement