சிறுமி மாயத்தில் தொடரும் மர்மம்..! உள்ளூர் ரவுடிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை.. நாளுக்கு நாள் சிபிசிஐடிக்கே திக் திக்..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை காணாமல் போய் இன்றுடன் 28 நாட்கள் நிறைவடைந்துள்ளன. உள்ளூர் போலீசாரிடம் இருந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டும், சிறுமி எங்கே இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பல கோணங்களில் விசாரணை நடத்திய சிபிசிஐடி
செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்றார். ஆனால், நள்ளிரவில் திடீரென குழந்தை காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
உள்ளூர் போலீசார் 10 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை முயற்சி, சாமியார் சரவணன் தலைமறைவு, ரவுடி ராஜதுரையிடம் விசாரணை எனப் பல கோணங்களில் விசாரித்தனர்.
மேலும், 600-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுர அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், நள்ளிரவு நேரங்களில் சுடுகாடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. உளவுத்துறை பிரிவுகளும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டன.
28 நாட்களாகியும் கிடைக்காத பதில்: பொதுமக்கள் அதிருப்தி
ஆரம்பத்தில் பல்வேறு கோணங்களில் தீவிரமாக நடைபெற்ற விசாரணை, கடந்த சில நாட்களாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தினசரி விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், குழந்தையைத் தேடும் பணியில் புதிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், ஹேமலதா உயிருடன் இருக்கிறாரா, அவருக்கு என்ன ஆனது என்ற கேள்விகள் பெற்றோர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வழக்கு விசாரணை மந்தமாகிவிட்டதா என்ற சந்தேகமும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
சிபிஐ விசாரணைக்கு வலுக்கும் கோரிக்கை
ஆரம்பகட்ட விசாரணையின்போது குற்றம் நடந்ததாகக் கருதப்படும் இடத்தைப் போலீசார் முறையாகப் பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், பணப் பரிமாற்றம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தொடர்புகள் குறித்த தகவல்கள் பேசப்பட்டாலும், அவை தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
இதற்கிடையே, 'எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்; குழந்தையை மீட்டுத் தந்தால் போதும்' என ஹேமலதாவின் தாய் பவானி தொடர்ந்து கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வருகிறார். குழந்தையை விரைவாக மீட்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி, இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 28 நாட்களாகியும் விடை கிடைக்காத ஹேமலதா மாயமான வழக்கில், குழந்தையைப் பத்திரமாக மீட்பதே தற்போது மிக முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.