நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. காரில் இடம் இல்லாததால் பைக்கில் சென்ற நண்பர்கள் விபத்தில் மரணம்.. கதறும் குடும்பத்தினர்..
நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. காரில் இடம் இல்லாததால் பைக்கில் சென்ற நண்பர்கள் விபத்தில் மரணம்.. கதறும் குடும்பத்தினர்..

சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே உள்ள சின்னச்சம்பை கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஆறுமுகவேலன் (28). வெளிநாடு சென்றுவிட்டு சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த இவரது நண்பன் நாகராஜன் (30) என்பவர் தனது குடும்பத்துடன் ஆறுமுகவேலன் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
இதனை அடுத்து இரண்டு குடும்பத்தினரும் விடுமுறையை கழிக்க அரியமான் கடற்கரைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அனைவரும் காரில் செல்ல இடம் இல்லாததால் நண்பர்கள் ஆறுமுகவேலன், நாகராஜன் இருவரும் பைக்கில் வர, மற்றவர்கள் காரில் சென்றுள்ளனர்.
நண்பர்கள் இருவரும் நதிப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியுள்ளது. இதில் ஆறுமுகவேலன், நாகராஜன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகவேலன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். நாகராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இருவரும் உயிரிழந்ததை கேட்டு அவர்களது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மினி வேனை ஓட்டிவந்த வேன் டிரைவர் அக்காள் மடத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணன் (24) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.