காய்கறி விலையை தொடர்ந்து... உச்சத்தைத் தொட்ட மளிகை பொருட்களின் விலை உயர்வு...!! கட்டுப்படுத்துமா அரசு...!!



Following the price of vegetables... the price of grocery items has reached a peak...

தக்காளி மற்றும் காய்கறிகள் விலை உயா்வைத் தொடா்ந்து, மளிகை பொருள்களின் விலையும் இருமடங்கு உயர்ந்து, உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு வாரமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130-வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதுபோல, மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக மளிகை பொருள்களின் விலை இருமடங்காக  உயர்ந்துள்ளது. கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அத்யாவசிய தேவையான அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருள்கள் வழக்கமான விலையிலிருந்து தற்போது 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளது. ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ சாதா பொன்னி அரிசி மூட்டை தற்போது ரூ.1,050 ஆகவும், நடுத்தர பொன்னி அரிசி ரூ.1,250 ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்ந்துள்ளது. 26 கிலோ பச்சரிசி மூட்டை ரூ.120 ல் இருந்து ரூ.1500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.119 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.150 க்கும், ரூ.112 க்கு விற்பனை செய்யப்பட்ட உளுத்து பருப்பு ரூ.124 க்கும், ரூ.61 க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைப்பருப்பு ரூ.66 க்கும், ரூ.91 க்கு விற்பனையான பாசிப்பருப்பு ரூ.102 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்ட சீரகம் ரூ.680 க்கும், ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட்ட மிளகு ரூ.550 க்கும், ரூ.75 க்கு விற்பனை செய்யப்பட்ட வெந்தயம் ரூ.84 க்கும், ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்ட கடுகு ரூ.74 க்கும், ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்ட புளி ரூ.150 க்கும், ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு ரூ.150 க்கும், ரூ.230 க்கு விற்பனை செய்யப்பட்ட நீட்டு மிளகாய் ரூ.260 க்கும், ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்ட சுக்கு ரூ.350 க்கும், ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலக்கடலை ரூ.125 க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இந்த கடுமையான விலை உயா்வு குறித்து கோயம்பேடு உணவு தானிய வணிகா்கள் சங்கத் தலைவா் மணிவண்ணன் கூறியதாவது: தமிழ் நாடு மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் மளிகை பொருள்கள் விற்பனைக்காக கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. விளைச்சல் குறைந்ததால் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்து உள்ளது. 

மகாராஷ்டிராவில் இருந்து துவரம் பருப்பு பெருமளவு கொண்டுவரப்படுகிறது. எனவே வரும் நாள்களில் துவரம் பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போக்குவரத்து கட்டணம், ஆள் கூலி ஆகிய காரணங்களாலும், மளிகை பொருள்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் அரசு, உணவுப் பொருள்கள் பதுக்கலை கட்டுப்படுத்தினால் விலை உயா்வு கட்டுப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.