கடன் தள்ளுபடி என்ற வதந்தியால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Farmers gathered in Pudukottai collector office


farmers-gathered-in-pudukottai-collector-office

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கிகளில் வாங்கியுள்ள விவசாயம் மற்றும் பிற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற போலியான செய்தி பரவியதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் மணு கொடுப்பதற்காக 10000க்கும் அதிகமான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். 

புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி வீசிய கஜா புயலால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. பெரும்பாலான விவசாய பயிர்கள் நாசமாகின. இதனால் அப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

pudukottai

இதனைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயம் மற்றும் பிற கடன்களின் வட்டி மற்றும் கடன் தொகையை திருப்பி செலுத்த ஒரு வருடம் கால நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரவர் கடன் பெற்ற வங்கிகளில் கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களது கடன் இதற்கு தகுதி பெறுமா என தெரிந்துகொள்ளுமாறு அறிவிப்பு வெளியானது. 

ஆனால் இந்த தகவல் முற்றிலும் திரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணு கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பொய்யான தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதனை நம்பிய விவசாயிகள் இன்று காலை முதலே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர தொடங்கியுள்ளனர். 

pudukottai

சமார் 10000க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கிகளில் கொடுக்க வேண்டிய படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று பின்பு வங்கிகளுக்கு அனுப்ப வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், "கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய கடன் உள்ளிட்ட அனைத்து வங்கிக் கடன்களுக்கும் அசல் மற்றும் வட்டி கட்ட ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடனை கட்ட அவகாசம் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை" என வெளியிட்டுள்ளார்.