பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மருத்துவர் சென்னையில் கொரோனா தொற்றால் மரணம்.!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மருத்துவர் சென்னையில் கொரோனா தொற்றால் மரணம்.!



famous doctor died for corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 கொரோனாவால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. அந்த வரிசையில் மருத்துவ உலகில் சிறந்து விளங்கிய, மூத்த மருத்துவர் கே.வரதாசாரி திருவேங்கடம் தற்போது கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். 

corona

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை 1950-ம் ஆண்டு முடித்த கே.வி.திருவேங்கடம், பல்வேறு நாடுகளில் மருத்துவ நிபுணத்துவ படிப்புகளும் பயின்றார். பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இயக்குனராக பணியாற்றினார். மார்பக புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து, புகழ் பெற்ற இவருக்கு, மத்திய அரசு, 1981ல், பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. 

மருத்துவ துறையில் தொடர்ந்து சிறப்பாக விளங்கியதற்காக பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார் மருத்துவர் கே.வி.திருவேங்கடம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கு முன், மருத்துவர் திருவேங்கடத்தின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவர் இயக்குனராக பணியாற்றிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என பலர் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.