தமிழகம்

மகனை பள்ளியில் விட்டு வீடு திரும்பிய தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! பட்டப்பகலில் ரவுடிகள் அட்டகாசம்

Summary:

Ex dmdk candiate murdered in chennai

சென்னை பாடியில் இன்று காலை தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தேமுதிகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடுரோட்டில் ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

பாடி முல்லை நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). தேமுதிக பொறியாளர் பிரிவில் பதவியில் இருக்கும் இவர், முன்னதாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தி நகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். கட்டிட காண்ட்ராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று காலை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் பாண்டியன். பாடி குமரன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தனர். 

பயங்கர ஆயுதங்களுடன் வந்த ரவுடி கும்பலைக் கண்டதும் பாண்டியன் அங்கிருத்து தப்பித்து ஓட முயன்றுள்ளார். இருப்பினும் ரவுடிகள் அவரை சுற்றி வளைத்து தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பாண்டியனை கொடூரமாக வெட்டியுள்ளனர். இதனால் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாண்டியன் அதே இடத்தில் பலியானார். அதனைத் தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை விற்பனை செய்ததில் பாண்டியனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் தான் பாண்டியனை பழிவாங்குவதற்காக இந்த கொலையினை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement