மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது; ஓட்டுநர் நடத்துனர் பொறுப்பு.. போக்குவரத்து துறை...!
பேருந்துகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை போக்குவரத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் மேல் கூரை போன்ற இடங்களில் தொங்கி செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் மாணவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் ஓட்டுநர்களுக்கு பல அறிவுரைகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பேருந்தில் மாணவர்கள் படிகட்டில் தொங்கி சென்றால் மாணவர்கள் குறித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் அளிக்கலாம் என்றும், மாணவர்களின் பாதுகாப்புக்கு ஓட்டுநர்களே பொறுப்பு என அதில் கூறப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து போக்குவரத்து துறை புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து மேலான் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டால் பேருந்தை நிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அறிவரை வழங்கியும் தொடர்ந்து மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100-ஐ அழைத்தோ தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அறிவுரை கேட்காதோர் மீது போக்குவரத்து கழகத்திடம் ஓட்டுநர், நடத்துநர் புகாரளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.