வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
#Breaking: கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள்? - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சியில் தமிழகம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷத்தன்மை கொண்ட மெத்தனால் சாராயம் குடித்த 120 க்கும் மேற்பட்டோரில், 37 பேர் உயிரிழந்தனர். எஞ்சியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதியான 22 நபர்களும், சேலத்தில் அனுமதியான 9 பேரும் என மொத்தமாக 37 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்த சாராய வியாபாரி கோவிந்தன், அவரின் மனைவி ரேவதி, தாய் ஜோதி, தம்பி தாமோதரன் உட்பட மொத்தமாக 10 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காலையே கிளம்பி கள்ளக்குறிச்சி வந்தடைந்தார்.
இதையும் படிங்க: "முதல்வர் பதவி விலகுக" - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் காட்டம்.!
அங்கு மருத்துவர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தவர், சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து இரங்களும் தெரிவித்தார். கருணாபுரம் பகுதியில் மரண ஓலம் வீதியெங்கும் சடலத்தை கிடத்தி கண்கலங்க வைக்கும் வகையில் சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
அரசு அதிகாரிகளின் அலட்சியம்
"கள்ளச்சாராயம் விற்பனை நடந்த பகுதிக்கு அருகே நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியின் தலைநகரில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது. இவ்வுளவு அரசு அலுவலகங்கள் இருந்தும், கண்காணிப்பு இன்மை காரணமாக 35 பேர் இறந்துள்ளனர். இது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முதல் தற்போது வரை 200 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் வரை 3 பேர் பலி என செய்தி வந்த நிலையில், அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை தந்துள்ளது. அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் இவ்வுளவு மோசமாக கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வுளவு துணிச்சலாக கள்ளச்சாராய விற்பனை நடக்க காரணம் என்ன?.
ஆளுங்கட்சி பிரமுகர்களுடன் கூட்டு
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உதவி இருக்கிறார்கள். இதற்கு தமிழக மக்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேர் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தார்கள். அப்போதும் நான் கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்டுவதாக கூறினேன். இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். அன்றும் ஆளுங்கட்சி அதிகார பலத்துடன் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது.
அப்போதே வழக்கு சிபிசிஐடி விசாரணை நடந்தபோதிலும், இன்று வரை எந்த கைதும் இல்லை, நடவடிக்கை இல்லை. இன்றும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், 5 நாட்களுக்கு முன்னதாகவே கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்புகொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுக்கூறி அறிவுறுத்தினார். காவல்துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மருத்துவரை கூட நியமனம் செய்யவில்லை
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. ஏழை-எளிய மக்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி இருக்கின்றனர். இந்த விசயத்திற்கு முழு பொறுப்பேற்று திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி என கூறி அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார். இப்படியான விஷயத்தை ஆட்சியர் எப்படி சொல்லலாம்?.
திமுக அரசு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காண்பித்த அக்கறையை கள்ளக்குறிச்சிக்கு காண்பித்து இருக்கலாம். மருத்துவமனையில் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தவில்லை. மருந்துகளை கையிருப்பு வைத்திருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மருத்துவரை கூட நியமனம் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டு, மருத்துவமனை அமைத்து கொடுக்கப்பட்டது. Omeprazole என்ற மருந்துகள் கூட திமுக அரசு வாங்கி கையிருப்பு வைக்கவில்லை.
விஷ சாராயத்தில் பெற்றோரை இழந்த குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உட்பட பிற உதவிகளும் செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கிறது" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்; வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வழக்கு.!