வீடியோ: நொடியில் விபத்து.. ஆம்புலன்சில் பயணித்த நோயாளி உட்பட 2 பேருக்கு துயரம்.. பதைபதைப்பு காட்சிகள்.!

வீடியோ: நொடியில் விபத்து.. ஆம்புலன்சில் பயணித்த நோயாளி உட்பட 2 பேருக்கு துயரம்.. பதைபதைப்பு காட்சிகள்.!


dindigul-vedasandur-ambulance-private-bus-accident-cctv

வேடசந்தூர் அருகே நடைபெற்ற தனியார் பேருந்து - அவசர ஊர்தி மோதிய விபத்தில், நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உயிரிழந்தார். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை, காளக்கவுண்டன்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). இவர் ஆர். புதுக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை நேரத்தில் காளக்கவுண்டன்பட்டியில் உள்ள சாலையை கடக்கையில், அவ்வழியாக வந்த சேவுராவூத்தனூர் பகுதியை சார்ந்த மணிவேல் (வயது 37) என்பவரின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. 

இந்த விபத்தில், பழனிச்சாமி படுகாயம் அடைந்த நிலையில், இவ்விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர ஊர்தி குழுவினர், பழனிசாமியை ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனை நோக்கி பயணம் செய்துள்ளனர். பழனிசாமிக்கு உதவியாக கோவிலூரை சார்ந்த உறவினர் வீரகுமார் (வயது 26) என்பவரும் அவசர ஊர்தியில் சென்றுள்ளார். 

Dindigul

அங்குள்ள தொட்டணம்பட்டி பகுதியை சார்ந்த சங்கர் (வயது 46) என்பவர் வாகனத்தை இயக்க, மருத்துவ உதவியாளர் சத்யா (வயது 22) உடன் இருந்துள்ளார். பழனிசாமிக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதே அவசர ஊர்தி மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பழனிச்சாமி கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

அவசர ஊர்தியில், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் சுமதியும் (வயது 30) திண்டுக்கல் செல்வதற்கு வாகனத்தில் பயணித்துள்ளார். இறுதியாக, நோயாளி பழனிச்சாமி, வீரகுமார், சத்யா, சுமதி, சங்கர் ஆகியோருடன் அவசர ஊர்தி புறப்பட்டுள்ளது. இவர்கள் பயணித்த அவசர ஊர்தி வேடசந்தூர் - திண்டுக்கல் நான்கு வழிசாலையில் பயணம் செய்தது. 

Dindigul

அங்குள்ள, விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் மில் அருகே அவசர ஊர்தி பயணித்துக்கொண்டு இருந்த நிலையில், கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது. இந்த பேருந்தை சின்னாளப்பட்டி அருகேயுள்ள நடுபட்டி பகுதியை சார்ந்த ரமேஷ்குமார் (வயது 29) என்பவர் இயக்கியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் தனியார் பேருந்தின் பின்புறத்தில் அவசர ஊர்தி பயங்கரமாக மோதியுள்ளது. 

நொடிப்பொழுதில் நடந்த இவ்விபத்தில், அவசர ஊர்தியின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கவே, அவசர ஊர்தியில் அவசர கதியில் பயணித்த பழனிச்சாமி மீண்டும் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவசர ஊர்தியில் வந்த பழனிச்சாமியின் உறவினர் வீரகுமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுநர் சங்கர், சத்யா, சுமதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பொதுமக்கள் காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Dindigul

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஓட்டுநர் சங்கர், சத்யா, சுமதி ஆகியோரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பழனிச்சாமி மற்றும் வீரகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வேடசந்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.