பீரோவை மாடியில் இருந்து கீழே இறங்குகையில் 3 பேர் மின்சாரம் தாக்கி பலி : தர்மபுரியில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!

பீரோவை மாடியில் இருந்து கீழே இறங்குகையில் 3 பேர் மின்சாரம் தாக்கி பலி : தர்மபுரியில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!


dharmapuri-3-died-electric-attack

மாடியில் இருந்து பீரோவை இறக்கிய சமயத்தில் மின்சாரம் பாய்ந்ததால் 3 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளிக்கு எதிரில் வசித்து வருபவர் பச்சையப்பன் (வயது 50). இவரது வீட்டின் மேல்மாடியில் இலியாஸ் (வயது 70) என்பவர், தனது குடும்பத்தாருடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் வேறொரு வீட்டிற்கு குடியேற முடிவு செய்திருந்த நிலையில், காலையில் வீட்டில் இருந்த பொருட்களை வெளியேற்ற டெம்போ வேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

டெம்போ வேன் வீட்டிற்கு முன்புறம் நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த பொருட்களை உரிமையாளர் பச்சையப்பன், ஆத்துமேடு கோபி (வயது 23), மேலகார தெரு குமார் (வயது 23), இலியாஸ் ஆகியோர் சேர்ந்து ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், மாடியில் இருந்து பால்கனி வழியே பீரோவை இறக்க முயற்சித்துள்ளனர். 

அப்போது, வீட்டின் மேலே சென்ற உயர் மின்கம்பி மீது பீரோ உரசியதில், பீரோவை இறக்கிய இலியாஸ் உட்பட 4 பேரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. வீட்டிலும் தீ பரவியுள்ளது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் பச்சையப்பன், கோபி, இலியாஸ் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமார் உயிருக்கு ஊசலாடி கொண்டு இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், வீட்டிற்குள் எரிந்த தீயை நீரைப்பாய்ச்சி அணைத்தனர். குமாரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த இலியாஸ், கோபி, பச்சையப்பன் ஆகியோரின் உடலை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.