உலகம் லைப் ஸ்டைல் சமூகம் General

"இது எங்கள் உரிமை..! நான் நிச்சயம் சபரிமலைக்கு செல்வேன்.." ஜோதிமணி பரபரப்பு பேச்சு..!!

Summary:

congress jothimani talked about sabarimala

கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இடிமுடி கட்டி பாதையாத்திரையாக செல்வது வழக்கம். எந்த சாதி பாகுபாடின்றி அனைவரும் அங்கு சென்று அய்யப்பனை தரிசிக்கலாம். 

அய்யப்பன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை இந்தக்களுக்கு அதிகம். ஆனால் அப்படிப்பட்ட அய்யப்பனை தரிசனம் செய்ய இது நாள் வரை எந்த பெண்களையும் அனுமதித்தது இல்லை கோவில் நிர்வாகம். இதற்கு பல தரப்பினரும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். 

சிலர் கூறுகையில், அய்யப்பன் கன்னி கலையாத புனிதமானவர். இந்த நிலையில் அவர் சபரிமலையில் தவம் புரிவதால் தான் அவரால் பக்தர்களுக்கு வேண்டிய அருள் வளங்களை அளிக்கமுடிகிறது. அய்யப்பனை காண வயதிற்கு வந்த பெண்கள் சென்றால் அவரது தவத்திற்கு இடையூறு உண்டாகும் எனவும் அதனால் அய்யப்பனின் சக்தி குறைந்துவிடும் எனவும் கூறி வருகின்றனர். 

ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சபரிமலை கோவிலுக்குள் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் வெளியிடப்பட்டது. 

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோர் இணைந்து ஒரு தீர்ப்பும், நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய மூவரும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர்.

தீபக் மிஸ்ரா, கன்வில்கர் தீர்ப்பில், "ஆண்களும், பெண்களும் சம அளவில் நடத்தப்பட வேண்டும். பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்கள் பலவீனமாக நடத்தப்படக்கூடாது. பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கோவில்களில் அவர்கள் வழிபடுவதற்கு பாகுபாடு காட்டக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மற்ற நீதிபதிகளான நாரிமன், சந்திரசூட் ஆமோதித்துள்ளனர்.

இறுதியில், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.

தீர்ப்பு வெளியாகிவிட்டது ஆனால் நடைமுறையில் இது எப்படி சாத்தியம் ஆகப் போகிறது என்று அனைவரும் எண்ண தொடங்கினர். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி பேசுகையில், ``இத்தனை வருடமாக சபரிமலை கோயிலுக்குள் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை உள்ளே அனுமதிக்காதது சட்டத்துக்குப் புறம்பானது. எந்த மதமோ, எந்த மதத்தின் புனித நூல்களோ பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சொன்னதில்லை. 

300 ஆண்டுகள் பழைமையான சம்பிரதாயம் என்கிறது கேரள தேவசம் போர்டு. ஆனால் மனித இனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. ஆண்,பெண் என்று மதம் பிரித்துப் பார்க்கவில்லை. `அகம் பிரம்மாஸ்மி' என்று அழகாய் சொல்லிவிட்டது. ஆனால் மனிதன்தான் மதத்தின் பெயரில் பிரிவினையை ஏற்படுத்துகிறான். அதேபோலத்தான், மசூதிக்குள் பெண்கள் போகக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. 

பெண்களை உடலால் மட்டுமே அளவிடும் ஆண் சமூகம், பெண்களை மதம் சார்ந்த விஷயங்களில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. சபரிமலை விஷயத்தில் பெண்களை அனுமதிக்காததுக்கு அறிவியல் சார்ந்த கருத்தும் இல்லை; சட்டம் சொல்வதையும் யாரும் கேட்கவில்லை. மதத்தின் பெயரால், பெண்களை அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

ஐயப்பனுக்குப் பல பெண்கள் பக்தைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கும். இனி தாராளமாக எல்லாரும் சபரிமலைக்குச் செல்லலாம். ஆமா...கண்டிப்பா நானும் சபரிமலைக்குப் போவேன். இது எங்கள் உரிமை. 

நீதிபதி இந்து மல்ஜோத்ராவின் தீர்ப்பையும் நாம் கவனிக்க வேண்டும். சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்கிறார். ஆண் மையக் கருத்துகள் ஆண்களுக்கு மட்டும் இருப்பதில்லை. இது காலம் காலமாக ஆண்கள் குறித்து பெண்களுக்குப் போதிக்கப்படும் ஒன்றுதான். அதுதான் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று பெண்களில் சிலரே கூறுவதற்குக் காரணம்'' என்று உணர்வு பூர்வமாக பேசியுள்ளார் ஜோதிமணி.


Advertisement