தமிழகம்

சென்னையில் நடந்துசெல்லும் இளம் பெண்களை குறிவைக்கும் மர்ம ஆசாமிகள்.. தீவிர விசாரணையில் காவல்துறை!

Summary:

சென்னையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது முதுகில் தட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது முதுகில் தட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் வெவ்வேறு பகுதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விருகம்பாக்கம் இளங்கோ நகர் முதல் தெருவில் இளம் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அந்த மாணவியின் முதுகில் தட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

அதேபோல் விருகம்பாக்கம் இளங்கோ நகர் இரண்டாவது தெருவில் இளம் பெண் ஒருவர் தனது தாயாருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இதேபோன்ற சம்பவம் அந்த பெண்ணிற்கும் நடந்துள்ளது. பல் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்துவரும் அந்த பெண்ணையும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் முதுகில் தட்டி பாலியல் சீண்டல் கொடுத்து தப்பி ஒட்டியுள்ளனர்.

மேலும் விருகம்பாக்கம் நடேசன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் கல்லூரி துணை பேராசிரியை ஒருவரின் முதுகிலும் மர்மநபர்கள் தட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை அடுத்து போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement