தமிழகம்

தந்தையிடம் ரூ.30 இலட்சம் பணம் பெற கடத்தல் நாடகம்.. மகனின் பரபரப்பு செயல்..! எச்சரித்து அனுப்பிய காவல்துறை.!

Summary:

தந்தையிடம் ரூ.30 இலட்சம் பணம் பெற கடத்தல் நாடகம்.. மகனின் பரபரப்பு செயல்..! எச்சரித்து அனுப்பிய காவல்துறை.!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பென்சிலையா (வயது 54). இவரின் மகன் கிருஷ்ணபிரசாத் (வயது 24). கடந்த 13 ஆம் தேதி வடபழனியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற தனது மகன் காணவில்லை என்று கூறி, பென்சிலையா வடபழனி R8 காவல் நிலையத்தில் ஜன. 14 ஆம் தேதி புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பென்சிலையா தனது மனைவி ஜெயலட்சுமி, மூத்த மகன் ஆகாஷ் மற்றும் கிருஷ்ணபிரசாத்துடன் வசித்து வருவது உறுதியான நிலையில், பென்சிலைய்யாவின் வாட்சப் எண்ணுக்கு கிருஷ்ண பிரசாத் அனுப்பிய தகவலில், "உங்களின் மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.30 இலட்சம் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்போம்" என்று இருந்தது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பென்சிலையா, தனது மகனை மர்ம நபர்கள் கடத்தி வைத்து, அவரின் அலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல் விடுத்துள்ளனர் என எண்ணி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, வடபழனி காவல் துறையினர் சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் செல்போன் நம்பரை ஆய்வு செய்கையில், அது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, வடபழனி காவல் துறையினர் மற்றும் செகந்திராபாத் காவல் துறையினர் இணைந்து, பெட்ஷீராபாத் பகுதியில் இருந்த கிருஷ்ணபிரசாத்தை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் நாடகம் அம்பலமானது. 

கிருஷ்ண பிரசாந்த் சரியான வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில், குறும்படம் எடுக்கவும் பணம் இல்லாமல் இருந்துள்ளார். தந்தையிடம் பணம் கேட்டு அவர் கொடுக்காத நிலையில், கடத்தல் நாடகம் அரங்கேற்றி பணத்தை பெறலாம் என முயற்சித்தது தெரியவந்தது. பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டதால் பேரில், உயரதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் காவல் துறையினர் கிருஷ்ண பிரசாந்தை கண்டித்து அனுப்பி வைத்தனர். 


Advertisement