ஓடும் இரயில் இறங்க முயற்சித்த 21 வயது இளம்பெண் தலையில் அடிபட்டு பரிதாப சாவு : துக்க வீட்டிற்கு சென்றுவருகையில் சோகம்.!
நடைமேடையில் தவறுதலாக மாற்றி இறங்கி குடும்பத்தினருடன் சேர முயற்சித்த இளம்பெண் தவறி விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் வசித்து வருபவர் எல்லப்பன். இவரின் மகள் அமுதா (வயது 21). இவர் தனது குடும்பத்தாருடன் சென்னை சூளையில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் காஞ்சிபுரத்தில் இருந்து மின்சார இரயில் மூலமாக பூங்கா இரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதில், 1ம் நடைமேடையில் மின்சார இரயில் நின்றபோது குடும்பத்தினர் இடதுபுற நடைமேடையில் இறங்கியுள்ளனர். அமுதா வலப்புறம் நடைமேடையில் இறங்கியுள்ளார். பின்னர் அமுதா நடைமேடையில் இல்லாததை கண்டு குடும்பத்தினர் கூச்சலிடவே, அமுதா இரயிலில் ஏறி இடப்புறம் வர முயற்சித்துள்ளார்.
இதற்குள்ளாக இரயில் புறப்பட்டுவிடவே, ஓடும் இரயிலில் இருந்து அமுதா இறங்க முயற்சி செய்கையில் கால் இடறி பின்புறம் விழுந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக எழும்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.