தமிழகம்

அடக்கடவுளே.. கவர்ந்திழுக்கும் விளம்பரத்தை பார்த்து..43 இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்..!

Summary:

கப்பல் வேலை என கூறி கவர்ந்திழுக்கும் விளம்பரத்தை பார்த்து 43 இளைஞர்கள் ரூ.48 இலட்சம் இழந்த சோகம் நடந்துள்ளது.

கப்பல் வேலை என கூறி கவர்ந்திழுக்கும் விளம்பரத்தை பார்த்து 43 இளைஞர்கள் ரூ.48 இலட்சம் இழந்த சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியை சார்ந்தவர் வினோத் (வயது 35). இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "நான் முகநூலில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மேலும், கை நிறைய சம்பளம், விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் என்றும் கவர்ந்திழுக்கும் வகையில் கூறப்பட்டு இருந்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில், இந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கையில், ரூ.1 இலட்சம் பணம் கொடுத்தால் வேலை உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்கள். நிறுவனத்தினர் கூறிய வங்கிக்கணக்கில் ரூ.1 இலட்சம் செலுத்திவிட்டு, கப்பல் வேலைக்கு விண்ணப்பித்தேன். அவர்களும் நேர்முக தேர்வை நடத்தினார்கள். அதிலும் பங்கேற்றேன்.

தற்போது வரை கப்பல் வேலை எனக்கு கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணமும் திரும்ப வழங்கப்படாத நிலையில், இதனைப்போல 43 பேர் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, மொத்தமாக ரூ.48 இலட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளோம் . வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்துள்ள பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கவர்ந்திழுக்கும் வகையிலான வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உண்மை தன்மை தெரியாமல் யாரும் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Advertisement