ஹோட்டலில் மூக்குப்பிடிக்க சாப்பிட்டு பணம் கொடுக்க மறுத்து தகராறு.. உணவகம் சூறை.!
சென்னையில் உள்ள அம்பத்தூர், புதூர் சாலையை சேர்ந்தவர் பிரேம் குமார் (வயது 35). இவர் அப்பகுதியில் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு பிரேம் குமார் மற்றும் அவரின் மனைவி இந்துஜா வியாபாரத்தை கவனித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 38) என்பவர், மதுபோதையில் உணவகத்திற்கு சாப்பிட வந்துள்ளார். ரூ.230 க்கும் மூக்குப்பிடிக்க சாப்பிட்ட ராஜேஷ், பணம் கொடுக்காமல் புறப்பட்டு சென்றுள்ளார். இதனைகவனித்த பிரேம் குமார் பணம் கேட்டுள்ளார்.
பணம் தர மறுப்பு தெரிவித்த ராஜேஷ் தகராறு செய்த நிலையில், வீட்டிற்கு சென்று தனது அண்ணன் சுரேஷ் (வயது 40) மற்றும் நண்பர் கோகுல் (வயது 27) ஆகியோரை அழைத்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் சேர்ந்து கடையை அடித்து நொறுக்கிய நிலையில், இந்துஜாவை அவதூறாக பேசி கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் காட்சிகளாக பதிவாகியுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக பிரேம் குமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ராஜேஷ், சுரேஷ், கோகுல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.