பார்ட்னர்கள் பிரிந்ததால் பங்கு தகராறு.. GPS ட்ராக்கிங் வாடகைக்காரில் கடத்தி சிக்கிய கும்பல்.! வேஸ்டான பிளான்.!
தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த பார்ட்னர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால், அவரின் மகனை கடத்தி கும்பல் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அம்பத்தூர், பாடி சத்தியவதி நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவரின் மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியம் (வயது 27). தந்தை - மகனும் சேர்ந்து அத்திப்பட்டு பகுதியில் ஆட்டோ மொபைல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார்கள். சுப்பிரமணியத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று வழக்கம்போல வேலை முடிந்ததும் நிறுவனத்தில் இருந்து அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, இவரின் காரை இடைமறித்த 4 பேர் கும்பல், அவரை கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சரவணனுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளும் பார்வையிடப்பட்டன. சி.சி.டி.வி கேமிரா உதவியுடன் ஆராய்ந்தபோது, கடத்தல் கும்பலின் கார் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களின் காரில் ஜி.பி.எஸ் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கவே, அதைவைத்து கண்காணித்தபோது ஆந்திரா மாநிலம் காளகஸ்தி பகுதியில் கார் செல்வது உறுதியானது.
தனிப்படை காவல் துறையினர் காளகஸ்திக்கு விரைந்து சென்ற நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் கும்பலை கைது செய்து சுப்பிரமணியத்தை மீட்டுள்ளனர். 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான ஒருவருக்கு வலை வீசப்பட்டுள்ளது. விசாரணையில், ஆவடியை சேர்ந்த செந்தில் குமார் (வயது 37), முகப்பேர் சிலம்பரசன் (வயது 20), அய்யப்பாக்கம் ஜீவன் பிரபு (வயது 21) என்பது தெரியவந்தது.
அதாவது, ஆதர்சின் தந்தை சரவணன் மற்றும் செந்தில் குமார் பார்ட்னராக ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் அதனை மூடியுள்ளனர். செந்தில் தனக்கு வர வேண்டிய பங்கை சரவணனிடம் கேட்கவே, அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் சரவணனின் அண்ணன் ராஜசேகர் (வயது 63) செந்தில்குமாரால் கடத்தப்பட்டுள்ளார். பின்னர், அம்பத்தூர் காவல் துறையினர் முயற்சியில் ராஜசேகர் மீட்கப்பட்டார்.
சிறைக்கு சென்ற செந்தில் குமார் அவ்வப்போது சரவணனிடம் பணம் கேட்டு வந்த நிலையில், அவர் தொடர்ந்து பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால் மகனை கடத்தியுள்ளார். மேலும், ரூ.1 கோடி பணம் கேட்டு ஆதர்ஸ் சுப்பிரமணியத்தின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.