அரசியல் தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வெற்றி வேட்பாளர்கள்!

Summary:

Candidates who got everyone's attention


தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது. 

இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இரு தினங்களாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர் சில வெற்றியாளர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் 2வது வார்டு கவுன்சிலராக திமுக வேட்பாளர் ரியா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில், முதல் திருநங்கை கவுன்சிலர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த சரஸ்வதி என்பவர், பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவர், தற்போது துப்புரவு பணியாளராக இருந்த ஊராட்சிக்கு தலைவராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73வயதாகும் தங்கவேலு என்ற மூதாட்டி 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து தற்போது வெற்றிபெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றிபெற்ற ஊராட்சியில் இவரது தந்தை தலைவராக இருந்துள்ளார். தற்போது அந்த தொகுதி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், அவரது மகள் அந்த தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.


 


Advertisement