மத்திய சென்னை பா.ஜ.க எஸ்.சி அணித்தலைவர் படுகொலை!.. சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு..! உச்சகட்ட அதிர்ச்சி..!

மத்திய சென்னை பா.ஜ.க எஸ்.சி அணித்தலைவர் படுகொலை!.. சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு..! உச்சகட்ட அதிர்ச்சி..!



bjp-executive-murdered-at-chintadripet-fish-market

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பா.ஜ.க மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி அணித் தலைவராக உள்ளார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு முன்பு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு ஏற்கனவே PSO எனப்படும் காவலர் ஒருவரை காவல்துறையினர் பாதுகாப்புக்கு வழங்கி உள்ளனர்.

இன்று இரவு சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து பாலச்சந்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினார்.

முதற்கட்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. பாலச்சந்தர் பின் வந்த அந்த மர்ம கும்பல் சாமி நாயக்கன் தெருவில் வைத்து பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

இரவு நேரத்தில் பாலச்சந்தர் தனது PSO  பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாமி நாயக்கர் தெருவிற்கு  சென்றுள்ளார். பாலச்சந்தர் நின்று அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரின் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் அங்கிருந்த டீ கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்து கொலையாளிகளின் தடையும் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் ஐந்து தனிப்படை அமைத்து சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கொலை நடந்த சுவாமி நாயக்கன் தெரு சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு சென்னை கிழக்கு இணை ஆணையர் பிரபாகரன் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் பகலவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  மேலும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்து பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.