Bird Flu: பறவைக்காய்ச்சல் அபாயம்.. கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திய தமிழக சுகாதாரத்துறை.!
கேரளாவில் அதிகரித்து வரும் பறவைக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா, கோட்டயம் உட்பட பல இடங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க கேரளா மாநில எல்லைப்பகுதியான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் இருக்கும் கேரளா மாநில எல்லையில் சோதனைசாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பறவைக்காய்ச்சல் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்:
இந்த விஷயம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவிக்கையில், "பறவைக்காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சம், கோழி தீவன வாகனங்கள் நீலகிரி தற்காலிகமாக வருகை தர தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் 7 சோதனை சாவடிகள், கர்நாடக மாநில எல்லையில் ஒரு சோதனைச்சாவடி என 8 இடங்களில் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: கனமழை காரணமாக மேலும் 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!!

கவனம் தேவை:
வாத்து, கோழி, வான்கோழி, வனப்பறவைகளை தாக்கும் பறவைக்காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கலாம். நோய் தாக்கிய பறவைகள் நீலகிரி நோக்கி வரும்போது, அந்நோய் இங்கும் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பண்ணை வைத்துள்ளவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனப்பறவைகள் பண்ணைக்குள் வராமல் கவனமாக இருக்க வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி ஆகியவற்றை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்க வேண்டாம். வெளியாட்கள் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: கனமழை காரணமாக 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!