ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆம்பூர் மாணவன் கைது.. மத்திய உளவுத்துறை நடவடிக்கை...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆம்பூர் மாணவன் கைது.. மத்திய உளவுத்துறை நடவடிக்கை...


Ambur student arrested in connection with ISIS terrorist movement.. Central intelligence operation...

வேலூர், தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததற்காக மத்திய உளவுத்துறையிடம் சிக்கிய ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர்அனாஸ்அலி(22). இவர் ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் நான்கு மணியளவில் மீர்அனாஸ்அலி வீட்டை மத்திய உளவுத்துறை மற்றும் மதுரை டிஎஸ்பி சந்திரசேகரன், வேலூர், திருச்சி, திருப்பத்தூர் நகரங்களை உள்ள உளவுத்துறை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குழுவினர் சுற்றி வளைத்தனர்.

வீட்டில் அவரது அறையில் அந்த  நேரத்திலும் லேப்டாப்பில் இயங்கி கொண்டிருந்த மீர்அனாஸ்அலியை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களும், சிம்கார்டுகளும், லேப்டாப்பும் கைப்பற்றப்பட்டன. பிறகு அவரை அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். காலையில் தொடங்கிய விசாரணை நள்ளிரவு பண்ணி ரெண்டு மணி வரை தொடர்ந்தது.

இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, மீர்அனாஸ்அலியின் செல்போன் உரையாடல்கள், சமூக ஊடகங்களில் அவர் செய்யும் பதிவுகள் முதலியவற்றை டெல்லியில் இருக்கும் மத்திய உளவுத்துறை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இதில் மீர்அனாஸ்அலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் செயல்படும் குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பதிவுகளை செய்து வந்ததுடன், தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வரும் மொராக்கோ, சிரியா என பல நாடுகளில் உள்ள பலருடன் தொடர்பு வைத்திருந்ததும்  தெரிய வந்துள்ளது என்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு பண்ணி ரெண்டு மணிக்கு தங்கள் விசாரணையை முடித்துக் கொண்ட உளவுத்துறை காவல்துறையினர், கைது செய்யப்பட்ட மீர்அனாஸ்அலியை ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்களில் செயல்பட்டது, தேச விரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது என குற்றவழக்கு எண் 193/2022, ஐபிசி 121, 122, 125 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் 1967, 18, 18ஏ, 20, 38, 39 ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீர்அனாஸ்அலி, நேற்று அதிகாலை ஆம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.