அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்ன?.. அதிமுக தலைமை கூறும் அதிகாரபூர்வ தகவல் இதோ.! விபரம் உள்ளே.!



AIADMK Says about Alliance Break on BJP AIADMK 

 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக இருக்கும் அதிமுகவும், தேசிய அளவில் மிகப்பெரிய வலுவான இயக்கமாக உள்ள பாஜகவும் தற்போது கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையேயான கருத்து மற்றும் வார்த்தை போர் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி முறிவு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக அதிமுக தலைமையும் தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளது. அந்த அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான அண்ணா, இதய தெய்வம் அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது. 

AIADMK

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்து வருகிறது. 

இந்த செயல் கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைமை கழக எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாலை கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.