தனியார் பள்ளியில் விபத்து: மேற்கூரையில் பெயிண்டிங் செய்தவர் மின்கம்பி உரசியதில் பரிதாப பலி..!

தனியார் பள்ளியில் விபத்து: மேற்கூரையில் பெயிண்டிங் செய்தவர் மின்கம்பி உரசியதில் பரிதாப பலி..!


accident-in-a-private-school-a-person-who-was-painting

கடலூர் மாவட்டம், வடலூர் நான்கு முனை சந்திப்பின் அருகே கும்பகோணம் சாலையில் சியான் மெட்ரிகுலேஷன் என்னும் தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளியின் முன்பு உள்ள அலுவலக மேற்கூறையில் பெயிண்டிங் வேலை செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது மகன் பிரான்சிஸ் (28) என்ற நபர் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி அலுவலக கட்டிடத்தின் அருகே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் பிரான்சிஸ்  உடல் கருகி மின் கம்பியிலேயே தொங்கியவாறு உயிரிழந்தார்.

மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்கம்பியில் தொங்கிய அவரை மீட்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இதற்கிடையே மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்த பின்பு அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வடலூர் காவல்துறையினர் விரைந்து வந்து மின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த பிரான்சிசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போதிய பாதுகாப்பு இன்றி ஊழியர்களை பெயிண்டிங் வேலையில் ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மின் கம்பி உரசி உடல் கருகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.