பைக்கில் மோதியதால் தட்டி கேட்ட... உணவு டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்...!
பைக்கில் மோதியதால் தட்டி கேட்ட... உணவு டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்...!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, உணவு விநியோகம் செய்யும் ஊழியரான, திருமலைவாசன் என்பவர், நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடித்துவிட்டு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பார்த்திபன் என்பவரின் பைக் திருமலைவாசனின் பைக் மீது மோதியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த திருமலைவாசன் இது பற்றி அவரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் திருமலை வாசனுக்கும் பைக்கில் மோதிய பார்த்திபனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு கைகலப்பாக மாறவே பார்த்திபனும் அவருடன் வந்தவரும் சேர்ந்து திருமலைவாசனை கொலைவெறியுடன் அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த திருமலைவாசன் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவத்தை அந்த வழியாக வந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள காட்பாடி போலீசார் திருமலைவாசன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய பார்த்திபனை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும், மேலும் பார்த்திபனுடன் வந்த நபரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இணையத்தில் பரவும் வீடியோவை வைத்து யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.