தமிழகம்

பெற்றோர்களை இழந்து தவிக்கும் 3 வயது குழந்தை; சேலம் பேருந்து விபத்தில் நடந்த பரிதாபம்

Summary:

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாங்கம் என்ற பகுதியில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் சொகுசு  பேருந்தும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

சாலையின் ஓரத்தில் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரிமீது மோதாமல் இருக்க கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தை கடைசி நேரத்தில் திருப்பி முயன்றதால் விபத்து  ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

சேலம் விபத்து

இந்த கோர விபத்தில்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 20-க்கு மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்த சேலம் கலெக்டர் ரோகிணி, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இதில் மேலும் பரிதாபம் என்னவென்றால் வார விடுமுறைக்காக பெங்களூரில் இருந்து கோட்டயம் நோக்கி சென்ற கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளார். அவர்களுடன்  பயணித்த அவர்களின் 3 வயது குழந்தை எந்த காயமுமின்றி தப்பியுள்ளார்.

ஒரே நேரத்தில் தன் பெற்றோரை இழந்து கதறி அழும் குழந்தையின் காட்சி மிகவும் பரிதாபமாக உள்ளது. உறவினர்கள் யாரும் வராததால் மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். 


Advertisement