கடைசி ஓவரில் கலக்கிய அர்ஜீன் டெண்டுல்கர்..!! ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த மும்பை இந்தியன்ஸ்..!!

கடைசி ஓவரில் கலக்கிய அர்ஜீன் டெண்டுல்கர்..!! ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த மும்பை இந்தியன்ஸ்..!!



Mumbai Indians-Hyderabad Sunrisers mumbai won the match by 14 runs.

மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. ரோஹித் 28, இஷான் கிஷன் 38, சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனுடன் கைகோர்த்த திலக் வர்மா அதிரடி காட்டினார். 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்த திலக் வர்மா ஆட்டமிழந்த நிலையில் டிம் டேவிட் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன் அரைசதம் விளாசினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீன் 64 (40) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் மார்கோ ஜான்சன் 2, புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, 193 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி ப்ரூக்-மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கியது. ஹாரி ப்ரூக் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ராகுல் திரிபாதி 7, கேப்டன் எய்டன் மார்க்ரம் 22, அபிஷேக் சர்மா 1 ரன்களுடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து கிளாசன் மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய கிளாசன் 36 (16) ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் 48 ரன்களில் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். பின்னர் மார்கோ ஜான்சென் 13 , வாஷிங்க்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெர்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஜுன் தெண்டுல்கர் கடைசி ஓவரை வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணி 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு தொடர்ச்சியாக பெற்ற 3 வது வெற்றியாகும்.