ஆதிக்கம் செலுத்தும் பாக்கிஸ்தான்.. மளமளவென சரிந்த இங்கிலாந்து விக்கெட்டுகள்!
ஆதிக்கம் செலுத்தும் பாக்கிஸ்தான்.. மளமளவென சரிந்த இங்கிலாந்து விக்கெட்டுகள்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளன. இதன் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 5 ஆம் தேதி துவங்கியது.
டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாளில் குறைவான ஓவர்களே வீசப்பட்டதால் பாக்கிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
நேற்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்ட துவக்கத்திலேயே பாக்கிஸ்தான் விக்கெட்டுகள் சரிய துவங்கின. 169 ரன்களுக்கே முக்கியமான 5 விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால் துவக்க ஆட்டக்காரர் மசூத் மட்டும் நிலைத்து நின்று ஆடி 156 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் பாக்கிஸ்தான் அணி 109.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே பாக்கிஸ்தான் அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரில் பர்ன்ஸ், 4 ஆவது ஓவரில் சிப்லி, 6 ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சற்று நிதானமாக ஆடிய ஜோ ரூட்டும் 20 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. பாக்கிஸ்தான் அணியின் அப்பாஸ் 2, அப்ரிடி மற்றும் யாசிர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.