பெங்களூரு அணியை தனி ஆளாய் நின்று வேட்டையாடிய டோனி கடைசி பந்தில் கோட்டைவிட்ட சோகம்!

பெங்களூரு அணியை தனி ஆளாய் நின்று வேட்டையாடிய டோனி கடைசி பந்தில் கோட்டைவிட்ட சோகம்!



dhoni-one-man-army

12 ஆவது ஐபிஎல் தொடரில் இன்றைய 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த த்ரில் ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் 1 வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.

IPL 2019

அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலையே அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரு அணியின் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் கேட்ச் கொடுத்து வெளியேற அடுத்த பந்திலேயே ரெய்னா க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து உமேஷ் யாதவ் வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தை சென்னை அணியின் டுபிளஸிஸ் சந்தித்தார். மிகவும் வேகமாக வீசப்பட்ட அந்த பந்து டுபிளஸிஸ் பாட்டில் படாமல் ஆப் ஸ்டம்பில் உரசிக்கொண்டு சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்ப் அசைந்து பைல்ஸ் விழாமல் இருந்ததால் டுபிளஸிஸ் அவுட்டாகாமல் தப்பித்தார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டுபிளஸிஸ் அவுட் ஆனார். 

IPL 2019

தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் அதே ஓவரில் டுபிளஸிஸ் அவுட்டானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது. அவரை தொடர்ந்து ஆறாவது ஓவரில் கேதர் ஜாதவ் 9 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் முதல் ஆறு ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த பரிதாப நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தல தோனி அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து நீதமாக ஆடினார். மேலும் அவ்வப்போது ஒரு சில பௌண்டரிகளை இருவரும் அடித்தனர். பொறுமையாக ஆடிய ராயுடு 29 ரன்கள்எடுத்து 14வது ஓவரில் சாகல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய தோனி தனது அரைசதத்தை கடந்தார். அதனைத் தொடர்ந்து 17-வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட் ஆனார்.

IPL 2019

கடைசி இரண்டு ஓவரில் 36 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறலாம் என்ற நிலை உருவானது. சைனி வீசிய 19வது ஓவரில் 5 பந்துகள் மற்றுமொரு நோபால் என ஆறு பந்துகளை சந்தித்த தோனி ஒரே ஒரு சிக்சர் மட்டும் அடித்தார். அந்த ஓவரில் சென்னை அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே ஓவரில் பிராவோ கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.

உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு நான்கு அடித்த டோனி அடுத்த இரண்டு பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். பின்னர் நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுத்த தோனி ஐந்தாவது பந்தில் மீண்டும் சிக்ஸரை விளாசினார். கடைசி பந்தில் சென்னை அணிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்தை சாமர்த்தியமாக மிகவும் மெதுவாக உமேஷ் யாதவ் வீச, தோனியால் அந்த பந்தை தொட முடியவில்லை. கீப்பரிடம் செல்வதற்கும் ஒரு ஓட்டம் எடுக்க முயன்றும் தாகூர் ரன் அவுட் ஆனதால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.