ஐபிஎல் அணியில் இருந்த வீரர் தற்போது முதல்வர் கனவில்!. சூடுபிடிக்கும் பீகார் அரசியல்.!



tejashwi-yadav-in-bihar-election

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டது. 

இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி 10.11.2020 இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு நடந்த தேர்தலில் நிதிஷ் குமார் இருக்கும்(பாஜக இணைந்துள்ள) தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி - காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணிக்கும்  இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

tejaswi yadav

தேஜஸ்வி யாதவ் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் தினத்தன்று அவரது தொண்டர்கள் அவரை முதல்வராக சித்தரித்து  மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். தேஜஸ்வி யாதவ் ஐபிஎல் போட்டியில் நான்கு சீசன்களில் 2008-2012 வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். 2010 இல் ஐபிஎல் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையிலும் தேஜஸ்வி பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தைக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போதே அவர் அரசியலுக்கு வருவார் என தெளிவாகத் தெரிந்தது.

பாஜக பேரணிகளில் எழுப்பத் தொடங்கிய தேசிய பிரச்சினைகள் குறித்து பேச தேஜஸ்வி யாதவ் விரும்பவில்லை. உள்ளூர் வளர்ச்சி, வேலையின்மை, ஊழல், பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய பிரச்சினைகளை  மட்டுமே தனது பிரச்சாரங்களில் பேசி சாதாரண மனிதர்களின் இதயத்தில் இடம்பிடித்தார். இந்தநிலையில் ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மெகா கூட்டணி 117  -இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி - 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.