அரசியல்

எத்தனை பேர் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!

Summary:

எத்தனை பேர் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!

அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க-வில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.  கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஒரு சில மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை குறித்து பேசத் தொடங்கிய பிறகு உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் வருகிற 23 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.கவினர் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என இரண்டி அணிகளாக பிரிந்து தங்களது பலத்தை நிரூபிக்கவும் அ.தி.மு.க தலைமை பொறுப்பை கைப்பற்றவும் பகீரத பிரயத்தனம் செய்துவருகின்றனர்.

அ.தி.மு.க-வின் பெரும் புள்ளிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால், அவரது பலம் கொஞ்சம் கூடியிருக்கிறது. மேலும் 72 மாவட்ட செயலாளர்களில் 60 பேருக்கு மேல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில், " அண்ணா தி.மு.க பலம் பொருந்திய கட்சி. எந்த காலத்திலும் அண்ணா தி.மு.க விழுந்ததாக சரித்திரம் இல்லை.  கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.   அவற்றையெல்லாம் முறியடித்து உங்களுடைய துணையுடன் அ.தி.மு.க எதிர்காலத்தில் மேலும் பலம் பொருந்திய கட்சியாக இருக்கும். நானே முன்நின்று காத்து நிற்பேன். அதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவினரான உங்களுடைய பங்கு மிக முக்கியம், அதனை முறையாக செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையாற்றியுள்ளார்.


Advertisement